TamilLeader

அர்ச்சனா ஐ.பி.எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்த அ.தி.மு.க. அரசுக்கு ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய முடியாதா?




 

     பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் அத்துமீறி நடந்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்யவிடாமல் தடுப்பது யார்? என்ற கேள்வி தான் தமிழக போலீஸ் துறையை குடைந்து வருகிறது.

 

      இதற்கு ஒரே பதில்…. முதல்வருக்கு அவர் மீது பயமா ? என்று நக்கலும் நய்யாண்டியுமாக கான்ஸ்டபிள் முதல் அதிகாரிகள் வரை வாட்ஸ் அப்பில் விவாதித்து வருகிறார்கள்.

 

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி.யான ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளப்பட்டார். அத்துடன், அவர் ஏவிய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் நேற்று (9.3.21) சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

    சென்னைக்கு டி.ஜி.பி. திரிபாதியிடம் புகார் கொடுக்க வந்துக்கொண்டிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை செங்கப்பட்டு பரணூர் சுங்கச் சாவடியில் அதிரடிப்படையுடன் சென்று, காரை வழி மறித்தவர் கண்ணன். அதுமட்டுமல்ல, காரின் சாவியையும் பறித்து, ராஜேஷ் தாஸிடம் பேசுங்கள் என மிரட்டி இருக்கிறார்.

 

    அவரையே சஸ்பெண்ட் செய்ய ‘’ஒப்புக்கொண்ட’’ தமிழக அரசு, ஏன் ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய மறுக்கிறது என்பது தான் புரியாத புதிர்.

 

   கண்ணன் ஐ.பி.எஸ். அதிகாரி அல்ல…. இன்னும் அவருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து இல்லை. அதனால் உடனே சஸ்பெண்ட் செய்துவிடலாம். ஆனால், ராஜேஷ் தாஸ் நேரடி ஐ.பி.எஸ். அதிகாரி. மத்திய உள்துறை அமைச்சகத்திடமோ அல்லது யு.பி.எஸ்.சி.யிடமோ அனுமதி பெற வேண்டும் என்ற தகவல் உலா வருகிறது.

 

   எந்த அதிகாரியாக இருந்தாலும், அந்த மாநில அரசு அவரை சஸ்பெண்ட் செய்யலாம்.

 

    தவறே செய்யாத அர்ச்சனா ராமசுந்தரம் ஐ.பி.எஸ். அதிகாரியை ஜெயலலிதா தலைமையிலான அரசு சஸ்பெண்ட் செய்தது. ஆனால், அர்ச்சனா ராமசுந்தரமோ மத்திய அரசுப்பணிக்குச் சென்று சி.பி.ஐ., இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

  

     ஏன், அர்ச்சனா ராமசுந்தரத்தை ஜெயலலிதா அரசு சஸ்பெண்ட் செய்தது.

 

    2014-ம் ஆண்டு அர்ச்சனா தமிழ்நாடு காவல்துறையின் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி.யாக இருந்தார். அவருக்கு சி.பி.ஐ. இணை இயக்குனராக நியமிக்கப்போகிறோம். உடனே அவரை மாநிலப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு, தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

 

      அர்ச்சனா ஐ.பி.எஸ்., ராமசுந்தரம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி. ராமசுந்தரம் தி.மு.க.வுக்கு நெருக்கம். அதனால், அர்ச்சனா சி.பி.ஐ.க்கு போகக்கூடாது என்ற கருதிய ஜெயலலிதா, மத்திய அரசின் கடிதத்தை கண்டுக்கொள்ளவில்லை.

 

      இதற்காக, இரண்டு முறை சந்திக்க சென்றார் அர்ச்சனா. முதல்வரை சந்திக்கவே முடியவில்லை. பிறகு, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயலலிதாவை வணக்கம் வைக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். ஆனால், முகத்தை திருப்பிக்கொண்டார் ஜெயலலிதா.

 

     அடுத்த நாளே, அர்ச்சனா டெல்லி பறந்தார். தமிழக அரசின் அனுமதியின்றி, சி.பி.ஐ.யில் இணை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

     அவ்வளவு தான்…. உடனே, அவரை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா.

 

       தவறே செய்யாத பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்த புண்ணிய ஆட்சி தான் தொடருகிறது. ஆனால், பெண் அதிகாரியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்த ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை.

 

ஏன்……?

ராஜேஸ் தாஸ் மீது முதல்வருக்கு பயமா?

 

English Summary

Why Still not Suspended Rajesh Doss IPS

TamilLeader