TamilLeader

தோப்புவை தனிமரமாக அலைய விட்டது மாஜி ஐ.ஜி.யா…?




 

     அ.தி.மு.க. அமைச்சரவையில் கோலோச்சியவர் தோப்பு வெங்கடாசலம். 2011 –ம் ஆண்டு பெருந்துறை சட்டமன்றத்திலிருந்து தேர்வானதும் ஈரோடு மாவட்ட அமைச்சராக வலம் வந்தார். முதல் துறையே வருவாய்த்துறை அமைச்சர். பிறகு, சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

      2016ம் ஆண்டு அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வாகியும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அவர் கைக்காட்டி, 2016-ல் எம்.எல்.ஏ. சீட் பெற்ற கருப்பணணுக்கு அடித்தது யோகம். அவர் சுற்றுச்சூழல் அமைச்சராகிவிட்டார்.

     காரணம், தோப்பு வெங்கடாசலம் சில வில்லங்க விவகாரத்தில் சிக்கிக்கொண்டது தான் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கொடுத்த செய்திகளை நாளிதழ்களும் வார இதழ்களும் வரிந்துக்கட்டி எழுதின.

      அதைப்பார்த்த ஜெயலலிதா, அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றார்கள். ஒரு வருடம் போகட்டும், எப்படியும் அமைச்சர் பதவியை வாங்கிவிடலாம் என்ற ஆசையில் இருந்தார் தோப்பு. ஆனால், ஆட்சி அமைந்த 6 மாதங்களில் ஜெயலலிதா இறந்தார். தோப்புவின் கனவுயும் சிதைந்தது.

 

      ஆனால், பெருந்துறை எம்.எல்.ஏ.வாக ஓரளவு மக்களை கைவிடாமல், செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ளும் பணியில் இறங்கினார். எத்தனை வித்தை காட்டினாலும், ஜெயலலிதா இறந்த பிறகு, அமைச்சரவையில் இடம் கேட்டு, நச்சரித்தும் முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை.

     கருப்பணனை தனது தொகுதிக்குள் விடாமல் ஓடவிடுவது, திடீர் திடீரென சசிகலா, தினகரனை உயர்த்தி பேசுவது என்ற விஷயங்கள் எல்லாம், அவருக்கு நெருக்கடியை அதிகரித்ததே தவிர, எடப்பாடி இறங்கி வந்தபாடில்லை.

      இந்த நிலையில், 2021 பொதுத்தேர்தலில் அவருக்கு வேட்பாளராகும் வாய்ப்பும் பறிபோனது. ஆர்ப்பாட்டம் செய்தார். அழுதார். ம்ம்ம்ம்ம்….. பலனே இல்லை. இன்று தனியாக வேட்பு மனு செய்து சுயேட்சையாக களம் இறங்கிவிட்டார்.

      ஏன் இந்த முடிவு என்றால்… எல்லாவற்றிற்கும் மாஜி ஐ.ஜி. தான் காரணம் என்று சாபம் விடுத்து வருகிறார் தோப்பு வெங்கடாசலம் என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

     அந்த மாஜி ஐ.ஜி. வேறு யாருமில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற கே.என்.சத்தியமூர்த்தி தான்.

      அவர் தோப்பு வெங்கடாசலத்தின் கல்லூரி தோழராகவும் இருந்திருக்கிறார்.

‘’அவர் தான், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியின் பேச்சைக்கொண்டு, கொங்கு மண்டலத்தில் இன்னொரு அமைச்சர் அதுவும் தங்கள் சமுதாயத்திலிருந்து வளரவிடக்கூடாது என்று அவர்களது உத்தரவின் பேரிலேயே, 2016ம் ஆண்டு தனக்கு கிடைக்கக்கூடிய அமைச்சர் பதவியை கெடுத்துவிட்டார் ‘’ என்று புலம்பி வருகிறாராம் தோப்பு.

     ‘’நான் அமைச்சராக இருந்த காலத்தில் ஐஜி., என்று பாராமல், என் கல்லூரி தோழனுக்காக எத்தனையோ செய்துக்கொடுத்தேன். அத்தனையும் வீணாகிவிட்டது. என் சாபம், அவர்கள் 3 பேரையும் சும்மா விடாது’’ என்று சொல்லி அழுது வருவதாக  கண்ணீர் சிந்துகிறது அவரது ஆதரவு கூட்டம்.

      வெங்கடாசலம் தனி மரமா…. மீண்டும் பெருந்துறையின் தோப்பா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் தெரியும்!

  • தமிழ் ஒற்றன் -
English Summary

Thoppu is Thani maram...?

TamilLeader