TamilLeader

குணசேகரனை தொடாதே… கண்ணன் மீது கை வைக்காதே…! -மாஜி ஐஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக்
குணசேகரனை தொடதே…
கண்ணன் மீது கை வைக்காதே…!
-மாஜி ஐஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக்


    தி.மு.க.வுக்கும் போலீஸ் துறைக்கும் தான் ஏழாம் பொருத்தம். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போலீஸ் கைகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போலீசார் சுதந்திரமாக இருக்க முடியும் என்ற ‘அல்வா’ கதைகள் ஏராளம்.
    
    2001-ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்த சம்பவத்தை அடுத்து, தி.மு.க. ஊர்வலத்தில் அயோத்திக்குப்பம் வீரமணியை வைத்து ‘கராத்தே’ வீரரும் செய்த கலகம் கொஞ்சமா நஞ்சமா…?
    அதே ஆட்சியில்தான்,  கோடி கோடியாக சுருட்டி வெளிநாட்டுக்கு கண்டெய்னர்கள் மூலம் கரன்சியை அனுப்பிய தத்து மகன் சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போட்டதும்…
    அதே ஆட்சியில் தான், உடன்பிறவா சகோதரியும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் விவகாரத்தில் 20 வயது நிரம்பிய செரீனா மீது கஞ்சா வழக்குப்போட்டதும்…
    அதே ஆட்சியில் தான், சென்னை ஐகோர்ட் நீதிபதியின் உறவினர் மீது கஞ்சா வழக்கு போட்டதும்…
     அதே ஆட்சியில் தான், 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் மீது வழக்குப்போட்டு, அரசு ஊழியர் சங்கத்தலைவர்களின் வீடுகளில் அர்த்த ராத்திரியில் புகுந்து, பெண்களையும் ஆண்களையும் கதற விட்டதும்…
-இப்படி அ.தி.மு.க. ஆட்சியிலும் ஏவல்துறையாக இருந்ததுதான் காவல்துறை.
    அது எல்லாம் பழைய கதை. அதை ஏன் கிளற வேண்டும் என்றால்…. பழைய கதையை கிளறினால் தானே, எப்படி அ.தி.மு.க. அரசு புதிய அசிங்கத்தையும் மறைக்க முயற்சித்து, ஊரே நாறிக்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள முடியும்.
      ஐ.ஜி. முருகன் என்ற ஒருவரால், தமிழ்நாட்டு காவல்துறையின் மானம் கப்பல் ஏறி இரண்டு வருடமாகிறது.
     அந்த ஐ.ஜி., மீது கொடுத்த புகாரை வேறு மாநில கோர்ட்டு விசாரிக்க உத்தரவு. எந்த நாட்டிலாவது ஒரு ஐ.ஜி., மீது கொடுத்த புகாரை வேறு மாநில  கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டதுண்டா…?
    அவர் என்ன முன்னாள் முதல்வரா…. அல்லது முன்னாள் கவர்னரா…?
     எல்லாம் காலத்தின் கொடுமையன்றோ?
    அந்த ஐ.ஜி., மீது புகார் வந்த நாளிலே, அவரை சஸ்பெண்ட் செய்து விசாரணை செய்திருந்தால்…. இன்று சிறப்பு டி.ஜி.பி. என்ற போர்வையில் ராஜேஷ் தாஸ் என்ற நபர், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் தவறாக நடந்திருப்பாரா?
    அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் பழைய சம்பவங்களை கிளறினேன் என்பது புரிகிறதா?
     இப்போது விஷயத்துக்கு வருவோம்.
    ராஜேஸ் தாஸ் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த புகாரில், ஒரு மொபைல் எண் கொடுக்கப்பட்டு, அந்த எண்ணியிலிருந்து பேசிய நபர், ‘’ என் கணவரின் தந்தைக்கு போன் செய்து, முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டி, புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று பேசினார்.
    அப்படி பேசியவர் …. குணசேகரன். இவர் மேற்கு மண்டல மதுவிலக்கு எஸ்.பி.யாக இருக்கிறார். இவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு அழைக்கக்கூடாது…. அவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவிடக் கூடாது என்று உளவுத்துறையில் பணியாற்றிய மாஜி ஐ.ஜி., சத்தியமூர்த்தி முதல்வர் அலுவலகத்திற்கு உத்தரவிடுகிறார். இதை அப்படியே செயல்படுத்தும், அங்கிருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
    இந்த செயல்கள் எல்லாம் முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா… தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை.
   அதுமட்டுமில்லை. பெண் அதிகாரி புகார் கொடுக்க சென்னை வந்த போது, செங்கப்பட்டு சுங்கச் சாவடியில் அவரது காரை மறித்து, கார் சாவியை பறித்த செங்கல்பட்டு எஸ்.பி., கண்ணனை மாற்றம் செய்யக்கூடாது என்று தடுத்துக்கொண்டிருப்பதும் அதே மாஜி ஐ.ஜி., சத்தியமூர்த்தி தான்.


    காரணம், இருவரும் இணைந்து செங்கல்பட்டில் மணல் மற்றும் கல்குவாரிகள் நடத்துவது என்ற குற்றச்சாட்டை அந்த மாவட்ட போலீசாரே வைத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், அப்படிப்பட்ட செய்திகள் போலீஸ் கான்ஸ்டபிள்கள் வாட்ஸ் அப் குழுவில் வந்துக்கொண்டிருக்கிறது.
‘’குணசேகரனை தொடாதே…. கண்ணன் மீது கை வைக்காதே’’ என்று சி.பி.சி.ஐ.டி.க்கு சவால் விடும் சத்தியமூர்த்தியின் ஆட்டத்துக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது?
-    தமிழ் ஒற்றன்

English Summary

Former IG Surgical Strike

TamilLeader