TamilLeader

தி.மு.க.வா….? கி.மு.வா….? என்ன கொடுமை மிஸ்டர் ஸ்டாலின்..!




 

    மிக மிக அதிக பரபரப்புடன், எதிர்பார்ப்புடன் எல்லாரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இருந்த தி.மு.க. வேட்பாளர் பட்டியல், அப்படி ஒரு ஆர்வத்தை தூண்டியதா….? என்றால் இல்லவே இல்லை.

     தி.மு.க. 173 வேட்பாளர்களையும் அதன் கூட்டணிக்கு 61 இடங்களையும் ஒதுக்கி இருக்கிறது. தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை பார்த்தால், பெரும் அயர்ச்சி ஏற்படுகிறது.

      ஏன் அயர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது தமிழ் லீடர் என்றால்…. அந்த பட்டியலில் பார்த்து பார்த்த சலித்து போன முகங்கள். பத்து ஆண்டுகளுக்கு பின்னரும் தி.மு.க.வில் புதியவர்களுக்கு எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றால், வெறும் 20 முதல் 25 பேருக்குள்ளாகவே இருக்கும்.

       இதற்கு எதற்காக தி.மு.க., கட்சி ஏன் ஐபேக் என்ற நிறுவனத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தொகுதியில் 4 மாதங்களாக அலசி ஆராய்ந்து கிடைத்த 3 வேட்பாளர்களில் எத்தனை பேர் புது முகம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.

      ஆனால், தி.மு.க. தரப்பில் மட்டுமில்லாமல் பல தரப்புகளிலும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 50 முதல் 60 பேர் புது முகங்களாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

     அப்பட்டியலில் ஏற்கனவே ஐந்தாறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் அல்லது ஐந்தாறு முறையில் போட்டியிட்டவர்கள் என்ற கிழவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

     தி.மு.க.வா….? அல்லது கிழவர்கள் முன்னேற்றக் கழகமா? என்ற எண்ணமே தி.மு.க. பட்டியலை பார்க்கும் போது எழுகிறது.

    காட்பாடியில் பொதுச்செயலாளர் துரைமுருகன்…  (1938)    

     அம்பாசமுத்திரத்தில் போட்டியிடும் ஆவுடையப்பன்….   (1944)

     மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெகதீசன்…. (1947)

     திருக்கோவிலூர் பொன்முடி… (1950)

     ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி... (1953)

      கம்பம் ராமகிருஷ்ணன் (1949)    

      சாத்தூர் ராமச்சந்திரன் (1949)

      எஸ்.ரகுபதி (1950)

      எஸ்.முத்துசாமி (1949)

      சென்னை அண்ணாநகரில் மோகன்… (1953)

 

-இப்படி எண்ணற்ற வேட்பாளர்கள் 70-ஐ நெருங்கியும், 70-க்கு மேலேயும் இருப்பவர்கள்.  இது தவிர, கடந்த 2016-ல் வெற்றி பெற்ற 100 எம்.எல்.ஏ.க்களில் கிட்டத்தட்ட 90 பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும், மீண்டும் பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டிருப்பது இளைய தலைமுறைக்கும், அந்த தொகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் அயர்ச்சியை ஏற்படுத்ததா…?

மூத்தவர்கள் தேவை… அனுபவசாலிகள் தேவை… என்ற காரணம் சொல்லப்பட்டாலும் பல முறை எம்.எல்.ஏ.க்களாகவும் இருந்தவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதால், தி.மு.க.வில் புதிய தலைமுறைக்கு வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

     குறிப்பாக, இன்னும் சில வேட்பாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளில் சிக்கி, நடக்க முடியாதவர்களும் உண்டு. அவர்கள் பெயரை இங்கே வெளியிடுவது நாகரீகமல்ல.

     அடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு இம்முறை கொடுக்கப்பட்டது நியாயமல்ல. உடனே, மூத்தவர்களுக்கு கொடுத்தாலும் தப்பு என்கிறாய்…. இளைஞர்களுக்கு கொடுத்தாலும் தப்பு என்கிறாயே என்ற வாதம் வைக்க வேண்டாம்.

     எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. ஆனால், தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் அதிகம். அல்லது அங்கே எந்த வாரிசு வந்தாலும் அதிக வெளிச்சம் விழுகிறது.

    அதே போல, திருவொற்றியூர் தொகுதியில் மறைந்த கே.பி.பி. சாமியின் தம்பியான சங்கருக்கு கொடுத்திருப்பதும், தி.மு.க. மீது அத்தொகுதியில் இருக்கும் மக்களின் எதிர்ப்பை கொடுக்கும். காரணம், அந்த அளவுக்கு வழக்குகளில் சிக்கி இருப்பவர் சங்கர்.

    இந்த முறை தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் புதிய முகங்களுக்கு 50-60 வரை வாய்ப்பு கொடுத்திருந்தால், அடுத்த பத்தாண்டுகளில் தி.மு.க.வின் வளர்ச்சி சீராக வளர்ந்திருக்கும்.

   அதை மு.க. ஸ்டாலின் தவறவிட்டுவிட்டார்.!

-தமிழ் ஒற்றன் -

English Summary

DMK Or KMK...?

TamilLeader